Thursday, February 4, 2010

கவிதைக் கரையோரம் - 2

நவீன கவிதையின் செயலூக்கத்திற்கும், அடுத்த கட்ட நகர்வுக்கும் முதன்மையாக
இருக்க வேண்டிய அம்சம், வாசகர்கள் அக்கவிதைகளை எந்த அளவு வரவேற்கிறார்கள்
என்பதாகவும் இருக்கிறது. கவிதையைப் பிடித்துப் போவதற்கு பல்வேறு
காரணங்கள் இருக்கின்றன. எப்போது ஒரு கவிதை வாசக மனதின் நெருக்கத்திற்கு
உள்ளாகிறது? நெருக்கம் என்பதன் அளவுகோல் எதுவாயிருக்க முடியும்?
காலச்சூழல் நெருக்கடி மிகுந்ததாகவும், எந்தவொரு மறைமுக வழியிலேனும் இன
அழிப்புச் செய்தலையும், மொழிச் சிதைப்பை கூடுமானவரை செய்யக்கூடியதாகவுமே
மக்கள் எதிர்கொள்கின்றனர். ஆற்றுப்படுத்தலை எதிர்பார்த்தும் உணவிடும்
கைகளைத் தேடும் விழிகளாக ஒரு இனமும் உலகம் முழுக்க நிலவுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களில் கூட அவரவர் குழுக்களுக்காக குரல் கொடுக்கிற
தலைமையேஇன்று வரவேற்கத்தக்கதாகவும், ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும்
உருவாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக் துயரத்தின் நிழல் படிந்த மக்களை
காப்பாற்றுகிற, ஒருங்கிணைந்த தலைவர்கள் இன்றி, குழு வாரியாக இணைய
வேண்டிய சூழ்நிலையில் மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். அவரவருக்கான
உரிமைப் போராட்டங்கள் வேறு இனத்தை அழிப்பதின் மூலம் தான் என்ற குறுகிய
புத்திக்குள் முடங்கிப் போன சமூகச் சூழலே இப்போதைய நிலை.

உரிமையை நிலை நிறுத்த வன்முறையை கையிலெடுக்கும் நிலையில் கைகளின்
வழியாகவும், மூளையின் வழியாகவும் பின்பற்றும் சூழ்நிலை ஊற்றெடுத்துக்
கிளம்புகிறது. மகிழ்ச்சியான நிமிடங்களும் , துயரமான நாட்களுமாகவே
அடித்தட்டு மக்கள் உருவாகியுள்ளனர். இவர்கலுக்காக உருவாகிற தலைவர்கள்
எந்தவொரு கொளகையோ, நீண்ட கால சிந்தனையோ அற்று, மக்களை சென்றுத் திரட்டி
தங்கள் சுயவேட்டைக்குப் பயன்படுத்துகின்றனர்.

இச்சூழ்நிலையில் மக்களின் மனநிலையில் இடைவிடாத கொந்தளிப்பும், சமூக
அவலத்திற்கெதிரான தவிப்புமாகவே பொழுதுகள் நகர்கின்றன. கவிஞனால் தெளிவாக
பிரச்சனையை அடையாளப்படுத்த பெரும் தடையாக சட்டமும், போலிக் காவலும்
இருக்கிறது. படிமம், குறியீடு என்று தன் கவிதைத் தளத்தை மூடிமறைக்க
வேண்டியிருக்கிறது. எந்த பேச்சையும் இறையாண்மைக்கு எதிராகத் திருப்பிக்
கொள்கிற நிலையில் எழுத்தின் சக்தியை நிரூபிக்கவும், எழுத்தின் எல்லை எது
என்பது பற்றியும், அதன் ஆழம் எத்தன்மையானது என்பது குறித்தும் எடைப் போட
வேண்டியவர்கள் அக்கவிதையின் வாசகர்கள்தான்.

இன்றைக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் இருபது இதழ்களாவது வணிக இதழ் என்கிற
தளத்தையும், சிறு பத்திரிகை என்கிற தளமுமற்ற நடுநிலையில் வருகின்றன.
இதழுக்கு ஐந்து கவிதைகள் எனில் குறைந்தது நூறு கவிதைகளாவது
அச்சேறுகின்றன. கவிதையார்வம் உடைய வாசகர்கள் முழுக்க இத்தனைக்
கவிதைகளையும் வாசிக்கவும் செய்கிறார்கள். நூறு கவிதைகளும் மனதிற்குள்
நிற்பதில்லை. ஒன்றிரண்டு தேறினால் லாபம்.ஆனாலும் கவிதைகள்
வாசிப்பிற்குள்ளாகிற அந்த உடனடி மனநிலையில் அவைகள் பாதிப்பை
உருவாக்குகின்றன. அடுத்த இதழ் ஒன்றைப் புரட்டுகிற போது இவை
நினைவிலிருந்து தப்பி விடுகின்றன.

வருடங்கள் கடந்தும் சில கவிதைகள் இடைவிடாமல் வாசகர் மனதில் அலை
எழுப்பிக் கொண்டேதான் இருக்கின்றன. ஓர் இடத்தைக் கடந்து போகிற போது ஒரு
முக்கியமான நிகழ்வு நமக்கு நடந்துவிடுகிற போது, ஒரு துயரத்தை எதிர்
கொள்கிற போது ஒரு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறபோது என்றெல்லாம்
தருணங்களுக்கேற்றபடி ஏதாவதொரு கவிதை நம் நினைவில் நெருடி சூழ்நிலையை
கௌவிக் கொள்கிறது. இந்த நிலையில் அக்கவிதை வெற்றிக்குரிய ஒரு கவிதையாக
தன்னை மகுடம் சூட்டிக் கொள்ளுகிறது. அக்கவிதையைப் படிக்கிற வாசகனுக்கு
அப்போதைய மனநிலையில் அது தெரியவும் வாய்ப்பில்லை.
மேற்கோள்கள் நினைவுக்கு வருவதற்கும் யாரோ ஒருவரின் அறிவுரைகள் நினைவுக்கு
வருவதற்கும், கவிதையொன்று நினைவிற்கு வருவதற்கும் வேறுபாடு உண்டென்பது
வாசிப்பு அனுபவம் தான் தீர்மானிக்கும்.

ஒரு கவிதை மேற்கோளாக தோல்வியடைவதும், ஒரு மேற்கோள் கவிதையாக
வெற்றியடைவதும் வாசிப்பு அனுபவத்தையும் எழுத்து அனுபவத்தையுமே
சார்ந்திருக்கிறது. துவக்க கால படைப்பாளிகளின் கவிதைகள் மேற்கோள்களாகவே
தேங்கிப் போவதற்கான காரண்மே வாசிப்பு அனுபவம் இன்மையே.
பெரும்பாலான ஆய்வாளர்கள் தொகுப்புகளாக வெளிவந்துள்ள கவிதை நூல்களை
மட்டுமே தங்கள் மேற்கோள்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். அந்த
சூழ்நிலையில் மட்டும் தான் அந்தக் கவிதை பரந்த வாசகத் தளத்திற்க்கு
வருகின்றது. வாசகர்களுக்கு இதழ்களின் வழியே வாசிப்புக்கு
வரக்கூடியவைகளாகவும், தொகுப்புகளாகவுமே வரக்க்கூடியவை. நடுநிலையில்
வரக்கூடிய இதழ்களைத் தவிர, குறைந்த பக்க அளவுகளில் வரக்கூடிய
சிற்றிதழ்களிலும் கவிதைகள் அச்சேறுகின்றன. அவைகள் பெரும்பாலும் குறைந்த
அள்வு வாசகத் தளத்தில் சுருங்கிவிடுகின்றன.

இப்படியான தளத்தில் நவீன கவிதையின் வெற்றியைத் தீர்மானிப்பதில் ரசனையின்
பங்கு குறிப்பிடத்தக்கதாகும். தனி மனிதனின் மனதிற்குள் அமுங்கிக்கிடக்கிற
உணர்வுகளின் தீண்டுதலாகவே ரசனையும் அமைகிறது. ரசனையை இப்போதைக்கு வாசகர்
பார்வையில் இப்படி வகைப் படுத்தலாம்.

1) மென்ரசனை 2) வன்ரசனை 3) வக்ர ரசனை 4) மேலோட்டப் பார்வை ரசனை 5)
பொய் ரசனை 6) எழுச்சி ரசனை 7) இயற்கை ரசனை. இவைகளைவிட கூடுதலாக இன்னும்
கூட இருக்கக்கூடும்.

மெல்லிய உணர்வுகளை ரசிப்பவர்களை இவ்வகைப்படுத்தலாம். இவர்களுக்கு
உணர்ச்சி பூர்வமாக காட்சிகளை வர்ணித்து ஒரு செய்தியை, ஒரு அனுபவத்தை
வெளிப்படுத்தினால்கூட அதை ஆக மிகச் சிறந்த கவிதை இதுதான் என்று முடிவு
செய்துவிடுவார்கள். மேற்கொண்டு எந்தவொரு கவிதையும் இவர்களின் ரசனைத்
தளத்தில் இடம் பெறுமானால் அது அதிசயம் தான். திரைப்படப்பாடல்களில் கூட
கவிதையை இனம் காண்கிறத் தன்மையை இவர்களிடம் இருக்கும். இவ்வகையான
வாசகர்கள் இந்தத் தளத்தை விட்டு வெளியேறி வாசிப்பை விரிவாக்காத
பட்சத்தில் நல்ல கவிதையின் சுவையை இழந்து விடுகிறவர்களாகவே சாபம்
பெறுகிறார்கள். இந்தத் தளத்தில் கவிதைகளைப் படைக்கிற படைப்பாளன் தன்
அனுபவ முயற்சியால் நகர்ந்துவிடுகிற போது வாசகன் அதே தளத்தில்
நின்றிருப்பது சரியானதாகாது.

எப்போதும் மற்றவர்களை அதிர்ச்சியடைய வைக்க வேண்டுமென்கிற ஆவலாதி
கொண்டவர்கள் வாசிப்பதும் நேசிப்பதும் வன்கவிதைகளைத்தான். தன் அனுபவத்தில்
கண்ட அதிர்வூட்டும் நிகழ்வுகளை படைப்பாக்குகிற படைப்பாளிகளை நகல்
எடுக்கிற படைப்பாளிகள், தாங்களே வாசகர்களாகவும் அவதாரமெடுத்து தனக்கான
கவிதைகளை கொண்டாடுகிறார்கள். உண்மையில் பல கவிதைகள் எந்த அதிர்வையும்
ஏற்படுத்துவதில்லை. மஞ்சள் பத்திரிகையின் வர்ணனையாக எஞ்சிவிடுகிற பல
வரிகள், மன அரிப்புக்கு தீனி போடுகிறவையாக மட்டுமே இருக்கின்றன. புதிய
வாசகர்களாக இக்கவிதைகளுக்கு அறிமுகமாகிறவர்கள் ஒன்றிரண்டு படைப்புகளில்
மட்டுமே அதிர்வடைகிறார்கள். காலப்போக்கில் இம்மாதிரியான கவிதைகள்
சலிப்பூட்டுவதாகவே அமைந்துவிடுகின்றன.

எல்லார்க்குள்ளும் ஏதோவொரு வகையில் வக்ர உணர்வு இருந்து கொண்டேதான்
இருக்கிறது. எதிர்க்கருத்துகள் மூலம் விவாதிப்பது கூட சில சமயங்களில்
வக்ர உணர்வின் வெளிப்பாடாகவே அமைகிறது. எறும்பு வரிசையைக் கலைத்துவிட்டு
வேடிக்கைப் பார்ப்பது, போகிற போக்கில் செடியில் நுனியைக் கிள்ளி
வீசிவிட்டுப் போவது, தன்னைவிட நிலை தாழ்ந்தவர்களை வார்த்தைகளால்
மிதித்துக் கொண்டே இருப்பது இப்படியான எல்லாச் செயல்களுக்குள்ளும்
தேங்கிக்கிடக்கிற வாசகர் மனம் கவிதைகளை வாசிக்கிற போது கூட அப்படியான
கவிதைகளுக்கே பல்லக்குத் தூக்குகிறது. எந்த வார்த்தையை எந்த இடத்தில்
பயன்படுத்துவதன் மூலம் வாசகனின் மனதில் தேங்கிக் கிடக்கிற வக்ரம்
மேலெழும் என்பதை நாடி பிடித்துப் பார்த்து எழுதுகிற கவிஞர்களுக்கு அதே
அலை வரிசை வாசகர்கள் அமைந்து விடுகிறார்கள். அந்த கவிஞர்களும் பரவலான
வரவேற்பைப் பெறத்தான் செய்கின்றனர். மனித மனதிற்குள் எழும் வக்ர
உணர்வுகளை கிளறிப் பார்த்து ரசிக்கிற எழுத்துகள் தோல்வியின்
அடையாளங்களாகவே காலம் நிரூபிக்கிறது.
தேவைப்படுகிற இடத்தில் தேவையான சொற்களை பிரயோகப்படுத்துவதை வன்முறையாக
தவிர்த்துவிட்டு, வாசகனை அதிர்வூட்ட வேண்டுமென்று எழுதப்படுகிறப்
படைப்புகளை வாசகர்கள் எளிதில் அடையாளம் காண்கிறார்கள். அக்கவிதைகள்
போலிகளாகவே தங்கிவிடுகின்றன.

ஒன்றிரண்டு படைப்பாளிகளின் கவிதைகள் உடல் அவஸ்தைகளை ஏற்படுத்துகிறது
எனில், அதைத் தொடர்ந்து வேறு படைப்பாளிகளும் அதே பாதையில் பயணிக்கத்
தொடங்கிவிடுவதுதான் அபத்தம். எழுதத் துவங்கி குறிப்பிட்ட ஆண்டுகள்
வரைகூட அதுபற்றி எழுதாதவர்கள் ஒரு படைப்பாளியின் வெற்றிப்
படிக்கட்டுகளைப் பிடித்துக் கொண்டு தாங்களும் உச்சியைத்
தொட்டுவிடலாமென்று நினைப்பது அறியாமையன்றி வேறென்ன? திடீரென்று ஒரு
குழுவாக இப்படியான படைப்பாளிகள் அவதரித்திருப்பதை வாசகர்கள் உணராத
பட்சத்தில் நவீனகவிதையில் தேக்கம் தவிர்க்க இயலாததாகிவிடும்.
ஆக கவிதையின் வெற்றியென்பது வாசகனின் வாசித்தல் ரசனை அனுபவத்தைப்
பொறுத்தது. தன் மூச்சுக் காற்றின் பாதையெங்கும் தான் ரசித்த கவிதையை
ஏந்திப் போகிற வாசகனாலே அக்கவிதை எல்லோரின் கவனத்துக்குள்ளாகிறது.
இப்பகிர்தல்கள் அவரவர் குழுவினருடனான பகிர்தலாகிறபோது ஆங்காங்கே
கவிதைகள் சிறந்த கவிதைகளாகி விடுகின்றன.

நவீன கவிதையைப் பொறுத்தளவில் மேற்கண்ட வகைப்படுத்துதலில் அடங்கிய
ரசனைகளைக் கடந்து கவித்துவத்தை அடையாளப்படுத்த வேண்டும். குழு
மனப்பான்மையை மையப்படுத்தி எடுத்தாளப்படுகிற கவிதைகள் வேறு ஒரு
தளத்தினரின் பார்வையில் வெறும் வரிகளாகிவிடுகிறது.
அழகியலையும், ஆற்றொண்ணா துயரத்தையும், சக உயிரின் துயரத்தையும் ஒரு சேரத்
தருகிற சில கவிதைகளே எப்போதும் பீடமேறிக் கொள்கின்றன.
சித்தாளும் ஒட்டுத்துணியும்

குனிந்து நிமிர வெப்ப மழை
கால் இடுக்கில் கசிய ஆரம்பிக்கிறது.
இரும்புச்சட்டியின் தூக்குக் கனத்தில்
ஒரு பிரளயச் செந்நிற வெள்ளம்
பொன்மேனியிலிருந்து புறப்படுகிறது.
பெண்ணைப் புரட்டிப் புரட்டித் துடைத்தாலும்
போக மறுக்கும் கவிச்சி வாடை
சுமப்பதில் சுகம் பறித்த வயிறுகள்
இழந்த இரத்தத்தை இழக்கவும்
வலித்து வருந்தித் தொலைக்கும் கேவல்கள்
பெண்ணின் கவிச்சி குடலேறிப்புரட்ட
காமம் தெளித்து உருக்குலைந்து உருகும்
வீதிகளின் சத்தத்திற்கும்
வீடுகளின் நாகரீகத்திற்கும்
எதிர் துருவத்தில் நின்று
நீளும் பரந்தாமனின் கைகளில் உருவுகிறாள்
வர மறுக்கும் ஒட்டுத்துணியை.
----------------------எஸ். தேன்மொழி
பெண்ணியக் கவிதைகளில் உணர்வு ரீதியாக பெண்ணைப் பற்றிய கவிதையாக
வெடித்துள்ளது.
சமூகம் சார்ந்த அக்கறையே எழுச்சி ரசனையாகிறது. நவீன கவிதையின்
சிறப்பம்சமே அது. பிரச்சாரத் தொனிக்கு எதிரானதாக பிரச்சாரத்தை முன்
வைக்கும் கவிதையாகிவிடுகிறது.

விசும்பும் திராணியற்று
சுருண்டு கிடக்கும்
வாடகைச் சிசுவோடு
கானல் மிதக்கும் சாலையில்
கையேந்துகிறாள் ஒருத்தி.
யாரோ ஒருத்தியின்
மார்க்காம்பில்
விஷம் தேங்குகிறது.
---------------------தூரன் குணா
சமூக அவலத்தை அடையாளப்படுத்தும் பன்முக ஆளுமையின் உச்சமாகவே இக்கவிதை
தன்னளவில் நிலைத்திருக்கிறது.
இனமும், தன் மனிதர்களும் துயரக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கையில், ஒரு
சிறு துரும்பையும் யாரும் எடுத்துப்போட மனதில்லாத சூழ்நிலையில் கவிஞனால்
கொஞ்சம் கவிதைகளும், ஓரிரு நாள் எதிர்ப்பிக் குரலையும் மட்டுமே பதிவு
செய்ய முடிகிறது. அந்தக் கவிதையில் எதையும் எதிர்பார்ப்பதைவிட ரசிக்கிற
மனம் உணர்வுக் கொந்தளிப்பில் எழுச்சியுறுகிறது.
இந்த மண்ணில்தான் பிறந்தோம்
சிரித்தோம்; மகிழ்ந்தோம்.
விளையாடினோம்.
எங்கள் உழைப்பை உயிரைத்தந்து – இந்த
மண்ணை வளமாக்கினோம்
ஆனால் இங்கு வாழ எங்களுக்கு உரிமையில்லை.
மொழியை, கலாச்சாரத்தை காரணம் காட்டி
எங்களின் வாழ்வுரிமைகளைப் பறித்தாய்
அகதிகளாக்கி உலகெங்கும்
பிச்சை எடுக்க வைத்தாய்.
உழைத்த இனத்திற்கு; தேசத்தை வளப்படுத்தியதற்கு
நீ தந்த பரிசு
துப்பாக்கிக் குண்டுகள்
பீரங்கிக் குண்டுகள் – அதோடு சேர்ந்து
கொஞ்சம் சவத் துணியும்
இன்றைய பதுங்கல் பின்வாங்கல் அல்ல
எழுச்சிக்காக; நாளைய எழுச்சிக்காக.
----------------------------இமையம்.
மேற்கண்ட கவிதையில் இறுதி இரண்டு வரிகள் வெற்றுப் பிரச்சாரம் போலத்
தோற்றமளித்தாலும், ஆழ்மனதின் ஆதரவு வெளிப்பாடாய் உடைத்துக் கொண்டெழுகிற
குரல். அதனாலேயே ரசிப்புக்குரிய கவிதையாகிவிடுகிறது.
ரசனையில் கிளர்ந்தெழுகிற தேடல் மிகச் சிறந்த கவிதைகளைத் தேடி மனதைப்
பயணிக்க வைக்கிறது. பயணத்தில் கோழி இறகுகளும், மயில் பீலிகளும்,
காட்டறுகளும், அடர்காடுகளும், சிறு அருவிகளும் , அச்சுறுத்தும்
விலங்குகளும், பசும் சோலைகளுமென்று விதவிதமாய் அறிமுகமாகவே செய்கிறது.
யார்? எந்த இடத்தில் நின்று விடுகிறோம் என்பதைப் பொறுத்து நம் ரசனையும்
நம் பயணத்தின் மூச்சை நிறுத்திக் கொள்கிறது.
வாசகன் தான் உணர்ந்து ரசித்தக் கவிதையை யாருக்கேனும் சொல்லிவிடத்
தவிக்கிற போது, கவிதை மறுபடியும் ஒரு முறை தன்னை எழுதிக் கொள்கிறது.
மூலப் பிரதியை விட இது அலாதியான குணம் கொண்டது.
எவ்வகையான கவிதைகளையும் ரசிக்க தனித் தனியான குழுக்கள் இருக்கும் வரை
நவீன கவிதை இருக்கத்தான் செய்யும். யார்? எவ்வகையான கவிதையை ரசித்து
வெளிப்படுத்துகிறோம் என்பதே கவிதையின் ஆயுளை நிர்ணயிக்கிறது.

- கவிஞர் அம்சப்பிரியா
* யுகமாயினி ஆகஸ்ட் இதழில் வெளிவந்தது

Tuesday, January 12, 2010

ராணி வேடமிட்ட சிறுமி - உரையாடல் போட்டிக்கவிதை

தன் நெடுநாளைய
எதிர்பார்ப்பு அரண்மனைக்குள்
அடியெடுத்துவைத்தாள்
தனக்கான சேவகர்கள் மண்டியிட்டிருக்க
எல்லோருக்கும் வாரி வாரி வழங்கினாள்
பேரன்பையும் கருவூலபெட்டகத்தையும்
நாட்டின் மூலைமுடுக்கெல்லாம்
சோற்றால் செழித்திருக்கும்படியாய்
ஆணைகளை பிறப்பித்தாள்.
எட்டுத்திக்கும் கொழிக்கும் வளம்பார்த்து
சிலாகித்து பெருமூச்சு விடுகையில்
நாடகம் முடிந்தும்
இன்னும் ராணியின் கனவாவென
கிரீடத்தை கழற்றச்சொல்லி
அதட்டிய ஆசிரியையின் கையில்
ஒப்படைத்தாள் சிறுமி
தன் பெரும் கனவுகள் யாவற்றையும்.

-"புன்னகை" அம்சப்ரியா

(உரையாடல் போட்டிக் கவிதை)

Monday, November 30, 2009

கவிதைக் கரையோரம் -1

இன்றைய அவசர உலகில் அவரவர் ஆற்ற வேண்டிய காரியங்களும், கடமைகளும்
நிறைந்து கிடக்கின்றன. முகம் பார்த்துப் பேசுவதற்கும் நேரமில்லை. ‘ ஆம் ‘
‘அப்படியா’ ‘ சரி ‘ ‘ பார்க்கலாம் ‘ இப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான
சொற்களால்தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.
மனிதர் வைத்த பூச்செடிகளில் கொத்துக் கொத்தாய் பூக்கள் மலர்ந்து
கிடக்கின்றன. நின்று ரசிக்க நேரமில்லை. உறவுக்கூட்டம் அணிஅணியாய்
இருந்தும் அவர்களோடு அளவளாவி உறவுகளைப் பலப்படுத்திக் கொள்கிற நிதானம்
இல்லை.

இந்த சூழலில் தான் எங்காவது ஒரு மூலையில் இவ்வுலகிற்கான வரிகளை ஏதாவது
ஒரு எழுதுகோல் எழுதிக் கொண்டிருக்கிறது. பிரதிபலனை எதிர்பார்த்தோ,
எதிர்பார்க்காமலோ அதன் வரிகள், வரிகளாக, பத்திகளாக, பக்கங்களாக,
தொகுதிகளாக விரிந்தபடி இருக்கிறது.

அது கவிதையாக இருப்பதற்கான சூழல் இங்கு அதிகம். கவிதை படிக்கிற, படிக்காத
எல்லோருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் மாயா உலக உணர்வு ஏதாவது சில
வரிகளை பிரசவித்தபடிதான் இருக்கிறது. கவிஞர்கள் கூட்டம்
அதிகமாகிவிட்டதாகவும், கவிதை அதனாலேயே நீர்த்துப் போய்விட்டதாகவும் அறிவு
ஜீவி வட்டம் எப்போதும் பிதற்றிக் கொண்டுதான் இருக்கிறது. வீட்டிற்கு
ஒருவரேனும் கவிதையெழுதுதல் சாலச் சிறந்தது.
இடைவிடாமல் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்... ! பேசுவதற்கு விசயங்கள்
கொட்டிக் கிடக்கின்றன. பறிபோகும் வேலை வாய்ப்புகள், கைநழுவிப் போகிற
வாழ்வியல் மகிழ்வுகள், மீட்டெடுக்க முடியாத இழப்பை எங்காவது சில ஆறுதல்
சொற்களால் மீட்டெடுத்துவிடலாம் என்கிற நப்பாசை.
இப்படிப் பேசுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாய் இருக்க கேட்பதற்கான
காதுகளுக்கோ ஏக கிராக்கி. யாரும் யாருடைய சொல்லையும் மனப்பூர்வமாகக்
கேட்கிற நிலையில் இன்றைய வாழ்வியல் இல்லை. அப்படிக் கேட்பதாக இருந்தாலும்
அதில் ஏராளமான பாசாங்குகள்.

இந்தச் சூழ்நிலையில் எராளமான மனங்கள் ஆறுதல் தேடி அலைவதுடன், தனக்கான
தீர்வை எந்த மந்திரமாவது கற்றுக் கொடுத்து விடாதா என்று காத்திருக்கிற
நிலை யாரும் எளிதில் அறிந்துகொள்ளக் கூடியதுதான்.
யாருடன் எதைப் பகிர்ந்து கொள்வது? எவ்வளவு தூரம் அது ஆத்மார்த்தமாய்
இருக்கும்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுகிற ஒருவனுக்கு மிக எளிதில் ஆறுதல்
தருகிற அற்புதம்தான் கவிதை. கவிதைக்குள் தன்னைத் தேடிப் பயணிக்கிற
ஒருவனின் பயணம் முற்று பெறாதது. மூழ்கி மூழ்கி தனக்கான முகத்தைத்
தேடுகிறான். சில சமயங்களில் கண்டடைகிறான். பல சமயங்களில்
ஏமாற்றமடைகிறான்.
பழமையின் வேர் பிடித்து வளர்ந்துள்ள கவிதையில் மரபுக் கவிதையின்
பரிச்சயமோ, மரபுக் கவிதைகளுக்குள் தன்னைத் தேடுகிற பயிற்சியோ, முயற்சியோ
அற்றவர்களை எளிதில் ஈர்த்தது புதுக் கவிதை.
ஒரு கட்டத்தில் சமூகப் பிரச்சனைகளே பெரும்பாலானவர்களுக்கு தனிப்பட்ட
பிரச்சனைகளாக இருந்தது. வேலையின்மை, வரதட்சணைப் பிரச்சனை, போலி அரசியலின்
மீது பொங்குகிற கோபம் என்று குறுகிYஅ எல்லைக்குள் புதுக் கவிதை முடங்கிக்
கிடந்தது. வெற்றுக் கோசங்கள், நடைமுறைக்குப் பொருந்தாத அறிவுரைகள் என்று
புதுக்கவிதை நீர்த்துப் போகத் துவங்கிய போது மாற்றாய் இடம் பிடித்துக்
கொண்டது நவீனக் கவிதை.
பிரச்சனைகளின் வேறு வேறு ரூபங்கள், தீர்வுகளற்ற அனுபவப் பகிர்வுகள்,
சமூகத்தின் மீதான மாறுபட்டக் கண்ணோட்டம், பழமையையும் மரபுகளையும்
அசைத்துப் பார்க்கிற புதுப் பார்வை , மாற்றுக் கண்ணோட்டத்தில்
பிரச்சனைகளை அடையாளப்படுத்துவதிலும் புதுமை. எடுத்துக் கொள்கிற
பாடுபொருளின் விசாலத் தன்மை என்று நவீனக்கவிதை தன் தளத்தை
விரிவுபடுத்திக் கொண்டது.
தனக்கான பிரச்சனைக்கான தீர்வைத் தேடிப் புறப்பட்ட வாசகன்
புதுக்கவிதையில் அடைந்த ஏமாற்றத்தை நவீனக்கவிதை ஈடுகட்டிவிட்டதா?
மறுக்கமுடியாமல் எழுகிற கேள்வி இது. இதற்கான விடையை யோசிக்கத்தான்
வேண்டும்.
இன்றைய நவீனக்கவிதைகள் பன்முகத் தன்மையை கொண்டே விளங்குகின்றன.
பாதிக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகள் புரிவதில்லை. எதைச் சொல்ல
வருகிறது என்பது எழுதியவருக்கே வெளிச்சமாவதில்லை. இந்தக் குற்றச்சாட்டில்
உண்மை இல்லாமல் இல்லை.
நவீனக்கவிதை எப்போது புரியாமல் போகிறது? துவக்க கால வாசகன்
எதிர்கொள்ளும் இச்சிக்கலை இரண்டுவிதமாக அணுகலாம்.
கவிதையின் சொற்றொடர்கள் புரியாமை. முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும்
இடையேயுள்ள தொடர்புகள் முன்னுக்குப்பின் இருப்பது;
முற்றிலும் அந்நியமான
சொற்களைப் பயன்படுத்துவது;திகைப்பூட்டவும், தன்னை அறிவு ஜீவியாகக்
காட்டிக் கொள்கிற மேதமை கூடிப்போகிற ஒரு கவிஞனால் கட்டமைக்கப்படும்
கவிதை வடிவம் மிரட்சியூட்டக் கூடியதாகவே இருக்கிறது. சொற்கள்
புரியாமையும் சொற்றொடர்களின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ளாததும் வாசகனின்
இயலாமையையே குறிக்கிறது. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்தக்
கவிதைகளின் வழியே வாசகன் தன்னை தரிசிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற
அபத்தம் கவிதையை வாசகனிடமிருந்து அந்நியப்படுத்தவே செய்யும்.
வாசகனை மிரட்சியூட்டக் கூடிய இக்கவிதைகளை படைக்கிற கவிஞன் உண்மையில்
கவிதையை பின்னெடுத்துச் செல்கிறவனே ! யாருக்கானக் கவிதையைத் தான்
தருகிறோம் என்கிற தெளிவற்ற நிலையில்தான் போலிச் சொற்களைக் கொண்டு நவீனக்
கவிதையைக் கட்டமைக்கிறான்.

இன்றைக்குத் தமிழில் முன்னணி நவீனக் கவிஞர்களாக அடையாளப்படுத்திக்
கொள்கிற ஒரு சிலருடைய தொகுப்புகளை வாசிக்கிற கவிஞன் நவீனக் கவிதையை
விட்டு வெகுதூரம் ஓடிப் போகிற நிலையிலேயே சொற்கட்டமைப்பு விளங்குகிறது.
துவக்ககால வாசகனைப் பார்த்து, அதைப் படித்தாயா…? இதைப்
படித்திருக்கிறாயா…? என்றெல்லாம் கேட்டு திணறடிப்பதும் மேலைநாட்டு
கவிஞர்களின் பெயர்களைச் சொல்லி மிரட்சி ஏற்படுத்துவதும் நவீனக்
கவிதைக்குள் அடியெடுத்து வைக்கிற துவக்ககால வாசகனை மிரட்சியடையவே
செய்கிறது.

புரிந்து கொள்வதில் அடுத்துவரும் சிக்கல், பாடுபொருளைப் புரிந்து
கொள்வது. கவிஞனின் பாடுபொருளோடு ஒரு வாசகன் நெருங்கி இருக்க
வேண்டுமென்கிற அவசியமில்லை. கவிஞனின் மென் கவிப்புலமையும், தேர்ந்த
சொல்லாற்றலும், அனுபவத்தின் ஆழ்ந்த சுவையும் அவன் பாடுபொருளைத்
தீர்மானிக்கிறது.

உண்மையில் கவிஞனின் அறிவு பாடுபொருளைத் தேர்ந்தெடுப்பதைவிட மனமே
பாடுபொருளைத் தேர்ந்தெடுக்கிறது. அவனைப் பாதிக்கிற விசயங்களும்,
இடைவிடாமல் மனக் கொந்தளிப்பில் பீறிட்டெழுகிற அனுபவங்களும் பாடுபொருளைத்
தீர்மானிக்கின்றன. அது தேசத்தைப் பற்றியும் இருக்கலாம். தனிமனித
வெறுமையையும், எரிச்சலூட்டுகிற, கோபமூட்டுகிற மனிதர்களை கரித்துக்
கொட்டுவதாகவும் இருக்கலாம். இதில் எந்த எல்லையும் இல்லை. ஒரு கவிஞனிடம்
எந்த பாடுபொருளை எழுத வேண்டும் என்று கட்டளையிடவோ, அறிவுறுத்தவோ
யாருக்கும் உரிமையில்லை.

தனக்கு ஒவ்வாத, பொருந்தாத பாடுபொருள்களைக் கொண்டிருக்கிற கவிதைகளை விட்டு
வாசகன் விலகிவிட உரிமையிருக்கிறது. பெரும்பகுதி மக்களுக்குப் பொருந்தாத
பாடுபொருள்களைக் கொண்டிருக்கிற கவிதைத் தொகுப்புகள் தோல்வியைத்
தழுவுவதற்குக் காரணம் வாசகனை நெருங்கவிடாமல் அறிவாயுதத்தால்
மிரட்டுவதுதான் என்பது தெளீவாகும்.

நவீனக் கவிதைக்குள் பயணத்தைத் துவங்கிவிட்ட வாசகன் கவிதையைப் புரிந்து
கொள்வதில் மேற்கண்ட இரண்டு நிலைகளையும் தேர்ந்த பயிற்சியால்
கடந்துவிட்டால் ஆத்மார்த்த கவியனுபவத்தைப் புரிந்துகொள்ள இயலும்.
வாசகனை நெருங்கவிடாத நவீனக்கவிதைகளால் எந்த பயனும் இல்லை. தனக்கும்
தன்னைச் சார்ந்த குழுவிற்கும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் ஒரு
தொகுப்பு வருகிறதெனில், ஒரு கையெழுத்துப் பிரதியை சுற்றுக்குவிட்டால்
போதும். தொகுப்பென்று யாரையும் மிரட்ட வேண்டிய அவசியமில்லை.
வாசகன் எளிதில் புரிந்து கொள்லமுடியாத கவிதைகளூக்கும் வாசகர்கள்
இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் தூக்கிப்பிடித்துக் கொண்டு புகழாரம்
சூட்டிக் கொள்ளுகிற குழு மனப்பான்மையினரே அவர்கள். சொற்களைப்
பிதற்றுவதும் , சொற்களைக் கொண்டு வரிகளை அமைப்பதும், நீள்வெட்டுத்
தோற்றம், தட்டையான வடிவம் என்றெல்லாம் விமர்சனத்தில் மிரட்டுவதும் நவீனக்
கவிதையை வாசகனிடமிருந்து அந்நியப்படுத்தவே செய்யும்.
இன்றைக்கு நவீனக் கவிதையின் தேவை அளவற்றது. மனிதனை தூண்டச் செய்து
பாதையைக் காட்டுவதும், தான் எந்த இடத்தில் மையம் கொண்டு இருக்கிறான்
என்பதைச் சுட்டிக் காட்டவும், தான் சார்ந்த மனிதர்கள் எந்த சூழ்நிலையில்
வாழ்கிறார்கள், அவர்களுக்குத் தான் ஆற்றவேண்டிய சமூகக் கடமையைச் சுட்டிக்
காட்டுவது என்று நவீனக் கவிதைக்குச் சில கடமைகள் இருக்கின்றன.
அப்படிப்பட்ட நவீன கவிதைகள் வாசகர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்துக்
கொண்டிருக்கின்றன. எங்கிருந்தோ எடுத்தாள்கிற, யாருடைய அனுபவத்தையோ
உள்வாங்கிக் கொள்கிற வேற்றுக் கலாச்சாரத்தின் அடையாளங்களை சுயம் போல்
காட்டிக்கொள்கிற போலிக் கவிதைகளே வாசகர்களை மிரட்டுகின்றன.

கவிதைப் புரியவில்லை என்கிற வாசகனின் சொற்களையும் ஒரு முறை
பரிசீலிக்கலாம்.தவறில்லை. புரியாத கவிதைகளுக்கு, புரிந்தது போல பாசாங்கு
செய்து பல்லாக்கு தூக்குபவர்களும் சற்று யோசிக்கலாம். ஒருவரை ஒருவர்
ஒப்பந்த அடிப்படையில் தூக்கிப்பிடித்து பொய்த் தொகுப்புகளுக்கு கிரீடம்
சூட்டுவதை வாசகர்கள் புரிந்து கொள்ளத் தான் செய்வார்கள். அவைகள்
ஒதுக்கப்படுகிறபோது, நீளும் கரங்கள், வாசகனின் புரிதலின் மீதும், அவனின்
வாசித்தல் ஆளுமையின் மீதும்தான் என்பதே வருத்தத்திற்குரியது.
இப்போது ஒரு கவிதை :

பூனை
பூனை ஒரு விலங்கு
அதற்குத் தெரிந்திருக்கிறது
ப்ரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பரிசிக்கும் போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக் கொள்வதென !


--இசை (தொகுப்பு : உறுமீன்களற்ற நதி )

Monday, November 2, 2009

தொடர்வண்டி வழி மறிக்கிறது

1.
தொடர்வண்டி வழி மறிக்கிறது

அந்த வினாடிகளில்தான்
நம் வாழ்வில்
மீண்டுமொருமுறை
பெரும்துக்கம்
பீடித்துக்கொள்கிறது.
நம்மை துரோகித்துப்போன
காதல்
தும்மலைப்போல
வந்துறுத்துகிறது.
வஞ்சித்த நட்பொன்று
ஞாபகத்தில்
ரத்தத்தை சூடேற்றுகிறது.
நம் குழந்தைக் காலத்தை
மீட்டெடுத்து தட்டிப்
பறிக்கிறார்கள்.
பொறுமையின்
பெருங்கணங்கள்
கரைந்துருகி
தார்ச்சாலைகளில் பிசுபிசுக்க
மெல்ல நகர்கிறது
வாகனங்கள்.
தடதடத்துக் கடந்து போகிறது
எதிரே வழி மறித்த
தொடர்வண்டி.
கலையும் கூட்டத்திலிருந்து
கலைகிறோம் நாமும்!

2.
தேவதைகள்

நாம் எதிர்பார்ப்பதுபோல்
தேவதைகள் நடந்து
கொள்வதில்லையெனினும்
தேவதைகளில்லையென்று
ஒப்புக் கொள்ளவும்
சங்கடமாயிருக்கிறது.

தினமொரு கடிதம்
நிமிடத்திற்கொரு எஸ்.எம்.எஸ்.
சற்று நேரத்திற்கொருமுறை
தொலைபேசியில் சிணுங்கலென்று
நம் கோரிக்கைகளை
தேவதைகள் பரிசீலிக்காவிடினும்
அவர்கள் தேவதைகளே!

பாவாடை தாவணி
ரெட்டை ஜடை
ஒற்றை ரோஜா
தேவதைகல் குறித்த கணிப்பு
தவறிப் போனாலும்
சுடிதார், பாப்கட்டிங், அவசரநடை
ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம்
தேவதைகளென.

அவரவர் வீட்டில்
அம்மாக்களாகவும் அக்காக்களாகவும்
தங்கைகளாகவும்
தேவதைகள் இருப்பதை
ஏற்றுக்கொள்வதில்லையெனினும்
அவர்கள்
அச்சொல்லொன்றிற்காக
எதிர்பார்த்திருக்கிறார்கள் என்றைக்கும்!

Wednesday, September 16, 2009

பாலைவெளி

நீ

புன்னகைக்காமலும்

கோபப்படாமலுமிருந்த

புகைப்படத்தின் முன் நிற்கிறேன்

கிளைத்து அரும்புகிறது

ஒரு யுகத்துக்கான விசும்பல்

அலைகள் துறந்த கடற்கரையோரம்

பொறுக்கிய கிளிஞ்சல்களில்

படிந்திருக்கிறது

நிராசையின் கரும்புள்ளிகள்

மலைப் பயணத்தில்

பறிக்கத் தவறிய

பெயர் அறியாத பூக்களின் புன்னகை

படர்கிறது இரவின் கடைசித் துளியிலும்

யாருடைய தேற்றலுமற்று

ஓயும் குழந்தையொன்றின்

அழுகையாய்ப் பெருக்கெடுக்கிறது

நீயற்ற பொழுதுகளின்

வெற்றிட வெம்மை!

Monday, August 31, 2009

நிமிர்ந்தால் வானம் அருகில்...


தேர்வுகள் முடிந்து விடுமுறைக் கொண்டாட்டத்திற்க்குப் பின் மறுபடியும் பள்ளிகள் துவங்கியிருக்கும். மதிப்பெண்களில் சாதித்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், குறைந்தவர்கள் பெரும் கவலையுடனும் இருக்கின்ற வகுப்பறைகளில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். இது ஒரு தொடர்கதைதான்.

உண்மையில் கல்விச்சாலையில் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? மதிப்பெண்கள் வாங்குவதுதான் பெருமையா? மதிப்பெண்கள் பெறாவிட்டால் அந்த மாணவன் முட்டாளா? எதற்கும் தகுதியில்லாதவனா? அப்படித்தான் பெரும்பாலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்கூட நினைத்திரிக்கிறார்கள்.

ஆனால் உறுதியாக அப்படியில்லை. கல்வியறிவில் தேறாதவர்கள்கூட பொது அறிவிலும், தங்களிம் சுய அறிவினாலும் திறமையாலும் முன்னேற்றப் பாதையில் தடம் பதித்திருக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பு வெறும் ஐந்தாவதுதான். மளிகைக் கடையில் வேலை. மற்றவர்களைப் போல சோர்ந்துவிடவில்லை. தனக்குள் இருக்கிற திறமையை இனம் கண்டு, அதை இடைவிடாமல் பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொண்டு, 'சாகித்ய அகாடமி' விருது பெறும் அளவுக்கு உயர்ந்துள்ள ஒருவரைப் பற்றி மாணவர்களே, அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்தான் மேலண்மை பொன்னுச்சாமி என்கிற அற்புத மனிதர்.

அண்மையில் சில மாணவர்களைக் கிராமங்களில் சந்தித்துப் பேச வேண்டியதாயிருந்தது. திரைப்பாடலை அடிமாறாமல் பாடுகிற திறமை வாய்ந்தவர்கள், பாடிக் கொண்டே நடனம் ஆடக்கூடியவர்கள், சிறுகதையில் சாதித்தவர்கள்கூட பின்வாங்குகிற அளவு திறம்பட சுவையுடன் கதை சொல்லக் கூடியவர்கள் என்று பல்திறப்பட்ட இளம் சாதனை மாண்வர்களைச் சந்தித்தேன்.

இவர்கள் உண்மையில் பட்டை தீட்ட ஆளற்ற வைரங்கள்.

வருத்தத்திற்குரிய செய்தியாக இருந்தது இன்னொன்று. யாரிடமும் உலக நடப்புகளைப் பற்றிய போதிய அறிவு துளியும் இல்லை என்பதுதான். பிரதமர், குடியரசுத் தலைவர் இவர்களின் பெயர்கள்கூட தெரியாமல் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களையும் சந்திக்க நேர்ந்தது.

பள்ளிப் பாடங்களைத் தவிர வேறு விஷயங்களில் நாட்டம் செலுத்துகிற பயிர்ச்சி இன்மையே இதற்குக் காரணம் ஆகும். மிகச் சிறந்த மதிப்பெண் வாங்குகிற மாணவர்கள்கூட மற்ற திறமைகளில் பின்வாங்கி விடுகின்றனர். இது எதிர்காலத்தில் பொருத்தமான பணிக்குச் செல்கிற விஷயத்தில் பெரும் தடையாகவே அமைகிறது.

மாணவர்கள் படிக்கிற காலத்திலேயே பாடங்களைத் தவிர மற்ற துறைகளிலும் போதுமான கவனம் செலுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.

எத்துறையாயினும் பேச்சுத் திறமை என்பது அவசியம். அப்பேச்சாற்றலை இளமையிலிருந்தே வளர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கேட்கிற வினாக்களுக்கு முந்திக்கொண்டு பதில் சொல்வதில் துவங்கி, எப்போது பேச்சுப்போட்டி வைத்தாலும் அதில் ஆர்வமாகக் கலந்து கொள்ள வேண்டும். வெற்றியா.. தோல்வியா.. என்பது பற்றிச் சிந்திக்க அவசியமில்லை.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை! புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை என்பது ஒரு கவிஞனின் வாக்கு.

இம்மாதிரியான போட்டிகளில் பங்கெடுக்கிற போது பல புத்தகங்களைப் புரட்டிக் குறிப்பெடுத்து தயார் செய்ய வேண்டிய அவசியம் நேர்கிறபோது புத்தகங்களை வாசிக்கிற பழக்கமும் ஏற்படும். ஒரே கல்லில் பல மாங்காய்கள் என்பது இதுதான்.

பெரும்பாலான மாணவர்கள் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ள விரும்புவதில்லை. சிலர் ஆர்வம் இருந்தும் கலந்து கொள்ளாமைக்கான காரணம்.. இம்மாதிரியான் போட்டிகளில் கலந்து கொண்டால் படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும் என்கிற தவறான் எண்ணம்.

போட்டிகளில் கலந்துகொள்வதற்கும், மதிப்பெண் வாங்குவதற்கும் சம்பந்தமில்லை. ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்கிஸ் செயல்படுகிற போது வெற்றி நம் வசமாகும்.

கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி இப்படி எந்தப் போட்டி வந்தாலும் மாணவர்களே... ஆர்வமாகக் கலந்து கொள்ளுங்கள். முதல் நான்கைந்து முறை வெற்றி பெற முடியா விட்டாலும் பரவாயில்லை. நாம் வெற்றிக்காகப் பெறுகிற சான்றிதழ்களையும், பரிசுகளையும்விட இதன் மூலம் பெறுகிற அனுபவங்கள் ஆற்றல் வாய்ந்தவை, பயனுள்ளவை.

வெற்றி பெறுகிறவர்களில் சிலர், தாங்கள் சுயமாகத் தயார் செய்யாமல் இருக்கிற யாரோ ஒருவர் தயார் செய்து கொடுக்கிற கருத்துகளை இவர்கள் பிரதியெடுத்து வெற்றி பெற்று விடுகிறார்கள். இது பயனற்றது. இம்மாதிரியான வெற்றிகளால் எந்தப் பயனும் விளையாது.

சுயமாக எல்லோர்க்குள்ளும் படைப்பாற்றல் மேலோங்கியிருக்கிறது. அந்தப் படைப்பாற்றல் துவக்கத்தில் ஆழமற்றதாக இருக்கலாம். தொடர் முயற்சிகள் மூலம் வீரியமான ஒரு சொந்தப் படைப்பைத் தரலாம்.

ரைட் சகோதரர்கள் எளிய கற்பனையாலும், விடாமுயற்சியாலும் ஆகாய விமானத்தை வடிவமைத்தனர்.

பள்ளிவாழ்க்கையில் எழுகிற எண்ணங்களும் , செயல்களுமே எதிர்காலத்தில் அவர்களை இலட்சிய மனிதர்களாக்குகிறது. இன்றைய சாதனையாளர்கள் யாவருமே மாணவப் பருவத்தில் பள்ளிப் பாடங்களோடு, தங்கள் சொந்தத் திறமையையும் பரிசோதனை செய்து கொண்டவர்தான்.

இன்றைய பல பிரபல எழுத்தாளர்கள் எல்லோருமே தங்கள் பள்ளிப் பருவத்தில் கவிதையென்றும், சிறுகதையென்றும் தோன்றியதையெல்லாம் எழுதிப் பார்த்தவர்கள்தான். அது ஒரு பயிற்சிக் களமாக அவர்களுக்கு இருந்தது.

உங்களுக்குள் பொதிந்து கிடக்கிற ஆற்றல் உங்களுக்கே தெரியாது. வெளிப்படுத்துகிற போது தான் அதன் வீரியம் புரியும்.

இந்தத் திறமைகளை முறியடிக்க பல சதித்திட்டங்கள் உங்களை முடக்கும். படிக்கிறதை ஒழுங்கா கவனி.. இவரு பெரிய கண்ணதாசனா வரப்போறாரு பாரு..'

'எப்பப் பாரு கிரிக்கெட்தான் உயிரு.. என்ன பெரிய சச்சினாவா வரப்போறாரு.. எல்லாம் வெறும் தண்டம்..'

இப்படி ஆசிரியர்களில் ஒருவரோ, பெற்றோரோ, வீதியில் போகிற யாரோ ஒருவரோ கூறுகிற அதிரடி வார்த்தைகள் உங்கள் எண்ணத்தைச் சிதறடிக்கும். கவலைப்படாதீர்கள்!

'ரேங்க் வாங்குகிறதில ஒன்னையும் காணோம்.. ஓவியம் வரயறாராம்... ஓவியம்...' என்று பெர்றோரின் வார்த்தைகள் தேளாய்க் கொட்டலாம்.

'ம்... இவரு இனிப் பேசித்தான்.. நாடு வளரப்போகுது...' நண்பர்கள் கேலி, குரல்வளையை நசுக்கலாம்.

போகட்டும்... இவர்கள் எல்லோரும் வருங்காலத்தில் உங்கள் திறமையைக் கண்டு வியப்பர்கள். அவர்கள் வியப்பதும் ஏசுவதும் நமக்கு முக்கியமல்ல. நம் திறமையை அடையாளப்படுத்துவதுதான் முக்கியம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.. பள்ளிப் பாடங்களைப் போலவே உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதிலும் முக்கியத்துவம் கொடுங்கள். அதற்கான ஆற்றலை வளர்த்தெடுக்க உதவும் ஆலோசனைகள் எங்கு கிடைக்குமோ அங்கு சென்று கண்டடையுங்கள்.

உங்களுக்குள் ஒரு சிறந்த விளையாட்டு வீரர், விஞ்ஞானி, ஓவியர், எழுத்தாளர், பேச்சாளர் ஒளிந்து கிடப்பதைத் தேடிக் கண்டுணருங்கள்.

அதிக மதிப்பெண், அதிக சம்பளமுள்ள வேலை, வசதியான வாழ்க்கை இவைகளுக்குப் பின்புலமாக உங்கள் திறமைகள் அமைவதுடன், பொதுநலம், மனித நெயம், சகோதரத்துவம் இவைகள் மலரவும் உங்கள் திறங்கள் பயன்படக் கூடும்.

இதோ உங்களைப் போல இரு மாணவிகள் எப்படித் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று பாருங்கள். ஒருவர் என்னுடைய மாணவி ந.சோபனா தேவி. இன்னொருவர் நான் விரும்பிப் படிக்கும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ்மொழி. இருவருமே 10-ஆம் வகுப்பு மாணவிகள்.

சிந்தும் மழையில்

சிறகடிக்கும் சிறுமி

சிட்டுக்குருவி

- ந.சோபனா தேவி

ஆறுமுகனே

பன்னிரு கைகள் வேண்டும்

வீட்டுப்பாடம்.

கு.அ.தமிழ்மொழி

எழுத்து: க.அம்சப்ரியா,"புன்னகை" சிற்றிதழ்,பொள்ளாச்சி