Monday, November 30, 2009

கவிதைக் கரையோரம் -1

இன்றைய அவசர உலகில் அவரவர் ஆற்ற வேண்டிய காரியங்களும், கடமைகளும்
நிறைந்து கிடக்கின்றன. முகம் பார்த்துப் பேசுவதற்கும் நேரமில்லை. ‘ ஆம் ‘
‘அப்படியா’ ‘ சரி ‘ ‘ பார்க்கலாம் ‘ இப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான
சொற்களால்தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.
மனிதர் வைத்த பூச்செடிகளில் கொத்துக் கொத்தாய் பூக்கள் மலர்ந்து
கிடக்கின்றன. நின்று ரசிக்க நேரமில்லை. உறவுக்கூட்டம் அணிஅணியாய்
இருந்தும் அவர்களோடு அளவளாவி உறவுகளைப் பலப்படுத்திக் கொள்கிற நிதானம்
இல்லை.

இந்த சூழலில் தான் எங்காவது ஒரு மூலையில் இவ்வுலகிற்கான வரிகளை ஏதாவது
ஒரு எழுதுகோல் எழுதிக் கொண்டிருக்கிறது. பிரதிபலனை எதிர்பார்த்தோ,
எதிர்பார்க்காமலோ அதன் வரிகள், வரிகளாக, பத்திகளாக, பக்கங்களாக,
தொகுதிகளாக விரிந்தபடி இருக்கிறது.

அது கவிதையாக இருப்பதற்கான சூழல் இங்கு அதிகம். கவிதை படிக்கிற, படிக்காத
எல்லோருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் மாயா உலக உணர்வு ஏதாவது சில
வரிகளை பிரசவித்தபடிதான் இருக்கிறது. கவிஞர்கள் கூட்டம்
அதிகமாகிவிட்டதாகவும், கவிதை அதனாலேயே நீர்த்துப் போய்விட்டதாகவும் அறிவு
ஜீவி வட்டம் எப்போதும் பிதற்றிக் கொண்டுதான் இருக்கிறது. வீட்டிற்கு
ஒருவரேனும் கவிதையெழுதுதல் சாலச் சிறந்தது.
இடைவிடாமல் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்... ! பேசுவதற்கு விசயங்கள்
கொட்டிக் கிடக்கின்றன. பறிபோகும் வேலை வாய்ப்புகள், கைநழுவிப் போகிற
வாழ்வியல் மகிழ்வுகள், மீட்டெடுக்க முடியாத இழப்பை எங்காவது சில ஆறுதல்
சொற்களால் மீட்டெடுத்துவிடலாம் என்கிற நப்பாசை.
இப்படிப் பேசுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாய் இருக்க கேட்பதற்கான
காதுகளுக்கோ ஏக கிராக்கி. யாரும் யாருடைய சொல்லையும் மனப்பூர்வமாகக்
கேட்கிற நிலையில் இன்றைய வாழ்வியல் இல்லை. அப்படிக் கேட்பதாக இருந்தாலும்
அதில் ஏராளமான பாசாங்குகள்.

இந்தச் சூழ்நிலையில் எராளமான மனங்கள் ஆறுதல் தேடி அலைவதுடன், தனக்கான
தீர்வை எந்த மந்திரமாவது கற்றுக் கொடுத்து விடாதா என்று காத்திருக்கிற
நிலை யாரும் எளிதில் அறிந்துகொள்ளக் கூடியதுதான்.
யாருடன் எதைப் பகிர்ந்து கொள்வது? எவ்வளவு தூரம் அது ஆத்மார்த்தமாய்
இருக்கும்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுகிற ஒருவனுக்கு மிக எளிதில் ஆறுதல்
தருகிற அற்புதம்தான் கவிதை. கவிதைக்குள் தன்னைத் தேடிப் பயணிக்கிற
ஒருவனின் பயணம் முற்று பெறாதது. மூழ்கி மூழ்கி தனக்கான முகத்தைத்
தேடுகிறான். சில சமயங்களில் கண்டடைகிறான். பல சமயங்களில்
ஏமாற்றமடைகிறான்.
பழமையின் வேர் பிடித்து வளர்ந்துள்ள கவிதையில் மரபுக் கவிதையின்
பரிச்சயமோ, மரபுக் கவிதைகளுக்குள் தன்னைத் தேடுகிற பயிற்சியோ, முயற்சியோ
அற்றவர்களை எளிதில் ஈர்த்தது புதுக் கவிதை.
ஒரு கட்டத்தில் சமூகப் பிரச்சனைகளே பெரும்பாலானவர்களுக்கு தனிப்பட்ட
பிரச்சனைகளாக இருந்தது. வேலையின்மை, வரதட்சணைப் பிரச்சனை, போலி அரசியலின்
மீது பொங்குகிற கோபம் என்று குறுகிYஅ எல்லைக்குள் புதுக் கவிதை முடங்கிக்
கிடந்தது. வெற்றுக் கோசங்கள், நடைமுறைக்குப் பொருந்தாத அறிவுரைகள் என்று
புதுக்கவிதை நீர்த்துப் போகத் துவங்கிய போது மாற்றாய் இடம் பிடித்துக்
கொண்டது நவீனக் கவிதை.
பிரச்சனைகளின் வேறு வேறு ரூபங்கள், தீர்வுகளற்ற அனுபவப் பகிர்வுகள்,
சமூகத்தின் மீதான மாறுபட்டக் கண்ணோட்டம், பழமையையும் மரபுகளையும்
அசைத்துப் பார்க்கிற புதுப் பார்வை , மாற்றுக் கண்ணோட்டத்தில்
பிரச்சனைகளை அடையாளப்படுத்துவதிலும் புதுமை. எடுத்துக் கொள்கிற
பாடுபொருளின் விசாலத் தன்மை என்று நவீனக்கவிதை தன் தளத்தை
விரிவுபடுத்திக் கொண்டது.
தனக்கான பிரச்சனைக்கான தீர்வைத் தேடிப் புறப்பட்ட வாசகன்
புதுக்கவிதையில் அடைந்த ஏமாற்றத்தை நவீனக்கவிதை ஈடுகட்டிவிட்டதா?
மறுக்கமுடியாமல் எழுகிற கேள்வி இது. இதற்கான விடையை யோசிக்கத்தான்
வேண்டும்.
இன்றைய நவீனக்கவிதைகள் பன்முகத் தன்மையை கொண்டே விளங்குகின்றன.
பாதிக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகள் புரிவதில்லை. எதைச் சொல்ல
வருகிறது என்பது எழுதியவருக்கே வெளிச்சமாவதில்லை. இந்தக் குற்றச்சாட்டில்
உண்மை இல்லாமல் இல்லை.
நவீனக்கவிதை எப்போது புரியாமல் போகிறது? துவக்க கால வாசகன்
எதிர்கொள்ளும் இச்சிக்கலை இரண்டுவிதமாக அணுகலாம்.
கவிதையின் சொற்றொடர்கள் புரியாமை. முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும்
இடையேயுள்ள தொடர்புகள் முன்னுக்குப்பின் இருப்பது;
முற்றிலும் அந்நியமான
சொற்களைப் பயன்படுத்துவது;திகைப்பூட்டவும், தன்னை அறிவு ஜீவியாகக்
காட்டிக் கொள்கிற மேதமை கூடிப்போகிற ஒரு கவிஞனால் கட்டமைக்கப்படும்
கவிதை வடிவம் மிரட்சியூட்டக் கூடியதாகவே இருக்கிறது. சொற்கள்
புரியாமையும் சொற்றொடர்களின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ளாததும் வாசகனின்
இயலாமையையே குறிக்கிறது. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்தக்
கவிதைகளின் வழியே வாசகன் தன்னை தரிசிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற
அபத்தம் கவிதையை வாசகனிடமிருந்து அந்நியப்படுத்தவே செய்யும்.
வாசகனை மிரட்சியூட்டக் கூடிய இக்கவிதைகளை படைக்கிற கவிஞன் உண்மையில்
கவிதையை பின்னெடுத்துச் செல்கிறவனே ! யாருக்கானக் கவிதையைத் தான்
தருகிறோம் என்கிற தெளிவற்ற நிலையில்தான் போலிச் சொற்களைக் கொண்டு நவீனக்
கவிதையைக் கட்டமைக்கிறான்.

இன்றைக்குத் தமிழில் முன்னணி நவீனக் கவிஞர்களாக அடையாளப்படுத்திக்
கொள்கிற ஒரு சிலருடைய தொகுப்புகளை வாசிக்கிற கவிஞன் நவீனக் கவிதையை
விட்டு வெகுதூரம் ஓடிப் போகிற நிலையிலேயே சொற்கட்டமைப்பு விளங்குகிறது.
துவக்ககால வாசகனைப் பார்த்து, அதைப் படித்தாயா…? இதைப்
படித்திருக்கிறாயா…? என்றெல்லாம் கேட்டு திணறடிப்பதும் மேலைநாட்டு
கவிஞர்களின் பெயர்களைச் சொல்லி மிரட்சி ஏற்படுத்துவதும் நவீனக்
கவிதைக்குள் அடியெடுத்து வைக்கிற துவக்ககால வாசகனை மிரட்சியடையவே
செய்கிறது.

புரிந்து கொள்வதில் அடுத்துவரும் சிக்கல், பாடுபொருளைப் புரிந்து
கொள்வது. கவிஞனின் பாடுபொருளோடு ஒரு வாசகன் நெருங்கி இருக்க
வேண்டுமென்கிற அவசியமில்லை. கவிஞனின் மென் கவிப்புலமையும், தேர்ந்த
சொல்லாற்றலும், அனுபவத்தின் ஆழ்ந்த சுவையும் அவன் பாடுபொருளைத்
தீர்மானிக்கிறது.

உண்மையில் கவிஞனின் அறிவு பாடுபொருளைத் தேர்ந்தெடுப்பதைவிட மனமே
பாடுபொருளைத் தேர்ந்தெடுக்கிறது. அவனைப் பாதிக்கிற விசயங்களும்,
இடைவிடாமல் மனக் கொந்தளிப்பில் பீறிட்டெழுகிற அனுபவங்களும் பாடுபொருளைத்
தீர்மானிக்கின்றன. அது தேசத்தைப் பற்றியும் இருக்கலாம். தனிமனித
வெறுமையையும், எரிச்சலூட்டுகிற, கோபமூட்டுகிற மனிதர்களை கரித்துக்
கொட்டுவதாகவும் இருக்கலாம். இதில் எந்த எல்லையும் இல்லை. ஒரு கவிஞனிடம்
எந்த பாடுபொருளை எழுத வேண்டும் என்று கட்டளையிடவோ, அறிவுறுத்தவோ
யாருக்கும் உரிமையில்லை.

தனக்கு ஒவ்வாத, பொருந்தாத பாடுபொருள்களைக் கொண்டிருக்கிற கவிதைகளை விட்டு
வாசகன் விலகிவிட உரிமையிருக்கிறது. பெரும்பகுதி மக்களுக்குப் பொருந்தாத
பாடுபொருள்களைக் கொண்டிருக்கிற கவிதைத் தொகுப்புகள் தோல்வியைத்
தழுவுவதற்குக் காரணம் வாசகனை நெருங்கவிடாமல் அறிவாயுதத்தால்
மிரட்டுவதுதான் என்பது தெளீவாகும்.

நவீனக் கவிதைக்குள் பயணத்தைத் துவங்கிவிட்ட வாசகன் கவிதையைப் புரிந்து
கொள்வதில் மேற்கண்ட இரண்டு நிலைகளையும் தேர்ந்த பயிற்சியால்
கடந்துவிட்டால் ஆத்மார்த்த கவியனுபவத்தைப் புரிந்துகொள்ள இயலும்.
வாசகனை நெருங்கவிடாத நவீனக்கவிதைகளால் எந்த பயனும் இல்லை. தனக்கும்
தன்னைச் சார்ந்த குழுவிற்கும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் ஒரு
தொகுப்பு வருகிறதெனில், ஒரு கையெழுத்துப் பிரதியை சுற்றுக்குவிட்டால்
போதும். தொகுப்பென்று யாரையும் மிரட்ட வேண்டிய அவசியமில்லை.
வாசகன் எளிதில் புரிந்து கொள்லமுடியாத கவிதைகளூக்கும் வாசகர்கள்
இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் தூக்கிப்பிடித்துக் கொண்டு புகழாரம்
சூட்டிக் கொள்ளுகிற குழு மனப்பான்மையினரே அவர்கள். சொற்களைப்
பிதற்றுவதும் , சொற்களைக் கொண்டு வரிகளை அமைப்பதும், நீள்வெட்டுத்
தோற்றம், தட்டையான வடிவம் என்றெல்லாம் விமர்சனத்தில் மிரட்டுவதும் நவீனக்
கவிதையை வாசகனிடமிருந்து அந்நியப்படுத்தவே செய்யும்.
இன்றைக்கு நவீனக் கவிதையின் தேவை அளவற்றது. மனிதனை தூண்டச் செய்து
பாதையைக் காட்டுவதும், தான் எந்த இடத்தில் மையம் கொண்டு இருக்கிறான்
என்பதைச் சுட்டிக் காட்டவும், தான் சார்ந்த மனிதர்கள் எந்த சூழ்நிலையில்
வாழ்கிறார்கள், அவர்களுக்குத் தான் ஆற்றவேண்டிய சமூகக் கடமையைச் சுட்டிக்
காட்டுவது என்று நவீனக் கவிதைக்குச் சில கடமைகள் இருக்கின்றன.
அப்படிப்பட்ட நவீன கவிதைகள் வாசகர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்துக்
கொண்டிருக்கின்றன. எங்கிருந்தோ எடுத்தாள்கிற, யாருடைய அனுபவத்தையோ
உள்வாங்கிக் கொள்கிற வேற்றுக் கலாச்சாரத்தின் அடையாளங்களை சுயம் போல்
காட்டிக்கொள்கிற போலிக் கவிதைகளே வாசகர்களை மிரட்டுகின்றன.

கவிதைப் புரியவில்லை என்கிற வாசகனின் சொற்களையும் ஒரு முறை
பரிசீலிக்கலாம்.தவறில்லை. புரியாத கவிதைகளுக்கு, புரிந்தது போல பாசாங்கு
செய்து பல்லாக்கு தூக்குபவர்களும் சற்று யோசிக்கலாம். ஒருவரை ஒருவர்
ஒப்பந்த அடிப்படையில் தூக்கிப்பிடித்து பொய்த் தொகுப்புகளுக்கு கிரீடம்
சூட்டுவதை வாசகர்கள் புரிந்து கொள்ளத் தான் செய்வார்கள். அவைகள்
ஒதுக்கப்படுகிறபோது, நீளும் கரங்கள், வாசகனின் புரிதலின் மீதும், அவனின்
வாசித்தல் ஆளுமையின் மீதும்தான் என்பதே வருத்தத்திற்குரியது.
இப்போது ஒரு கவிதை :

பூனை
பூனை ஒரு விலங்கு
அதற்குத் தெரிந்திருக்கிறது
ப்ரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பரிசிக்கும் போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக் கொள்வதென !


--இசை (தொகுப்பு : உறுமீன்களற்ற நதி )

4 comments:

பூங்குன்றன்.வே said...

முழு கட்டுரையும்,பூனை கவிதையும் நிறைய யோசிக்க வைக்கிறது.நன்றி.

ராஜா சந்திரசேகர் said...

pls visit my blog
http://raajaachandrasekar.blogspot.com/
and watch this film
http://www.youtube.com/watch?v=5y5GnzQLqGs

" உழவன் " " Uzhavan " said...

//பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்தக்
கவிதைகளின் வழியே வாசகன் தன்னை தரிசிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற
அபத்தம் கவிதையை வாசகனிடமிருந்து அந்நியப்படுத்தவே செய்யும்//
 
நிச்சயமாக.. இப்போது வெளிவரும் பெரும்பான்மையான கவிதைகளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அப்படிப் புரிந்து கொள்வதற்கு அதிகமான வாசிப்பனுபவம் வேண்டுமெனில், ஒரு சாமானியக்கு இவர்கள் எப்போது கவிதை எழுதப்போகிறார்கள்? சுண்டல் விற்பவன் அவன் வைத்திருக்கும் தாள்களில் இருக்கும் ஒரு கவிதையைப் படித்துப் புரிந்து ரசித்தால்தானே அது எல்லோருக்குமான கவிதை.

இளவழுதி வீரராசன் said...

நல்ல சிந்தனை; அதை தெளிந்த நீரோடையுமாக சொல்லி உள்ளீர். உழவனின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்

Post a Comment