Monday, August 31, 2009

நிமிர்ந்தால் வானம் அருகில்...


தேர்வுகள் முடிந்து விடுமுறைக் கொண்டாட்டத்திற்க்குப் பின் மறுபடியும் பள்ளிகள் துவங்கியிருக்கும். மதிப்பெண்களில் சாதித்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், குறைந்தவர்கள் பெரும் கவலையுடனும் இருக்கின்ற வகுப்பறைகளில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். இது ஒரு தொடர்கதைதான்.

உண்மையில் கல்விச்சாலையில் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? மதிப்பெண்கள் வாங்குவதுதான் பெருமையா? மதிப்பெண்கள் பெறாவிட்டால் அந்த மாணவன் முட்டாளா? எதற்கும் தகுதியில்லாதவனா? அப்படித்தான் பெரும்பாலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்கூட நினைத்திரிக்கிறார்கள்.

ஆனால் உறுதியாக அப்படியில்லை. கல்வியறிவில் தேறாதவர்கள்கூட பொது அறிவிலும், தங்களிம் சுய அறிவினாலும் திறமையாலும் முன்னேற்றப் பாதையில் தடம் பதித்திருக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பு வெறும் ஐந்தாவதுதான். மளிகைக் கடையில் வேலை. மற்றவர்களைப் போல சோர்ந்துவிடவில்லை. தனக்குள் இருக்கிற திறமையை இனம் கண்டு, அதை இடைவிடாமல் பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொண்டு, 'சாகித்ய அகாடமி' விருது பெறும் அளவுக்கு உயர்ந்துள்ள ஒருவரைப் பற்றி மாணவர்களே, அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்தான் மேலண்மை பொன்னுச்சாமி என்கிற அற்புத மனிதர்.

அண்மையில் சில மாணவர்களைக் கிராமங்களில் சந்தித்துப் பேச வேண்டியதாயிருந்தது. திரைப்பாடலை அடிமாறாமல் பாடுகிற திறமை வாய்ந்தவர்கள், பாடிக் கொண்டே நடனம் ஆடக்கூடியவர்கள், சிறுகதையில் சாதித்தவர்கள்கூட பின்வாங்குகிற அளவு திறம்பட சுவையுடன் கதை சொல்லக் கூடியவர்கள் என்று பல்திறப்பட்ட இளம் சாதனை மாண்வர்களைச் சந்தித்தேன்.

இவர்கள் உண்மையில் பட்டை தீட்ட ஆளற்ற வைரங்கள்.

வருத்தத்திற்குரிய செய்தியாக இருந்தது இன்னொன்று. யாரிடமும் உலக நடப்புகளைப் பற்றிய போதிய அறிவு துளியும் இல்லை என்பதுதான். பிரதமர், குடியரசுத் தலைவர் இவர்களின் பெயர்கள்கூட தெரியாமல் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களையும் சந்திக்க நேர்ந்தது.

பள்ளிப் பாடங்களைத் தவிர வேறு விஷயங்களில் நாட்டம் செலுத்துகிற பயிர்ச்சி இன்மையே இதற்குக் காரணம் ஆகும். மிகச் சிறந்த மதிப்பெண் வாங்குகிற மாணவர்கள்கூட மற்ற திறமைகளில் பின்வாங்கி விடுகின்றனர். இது எதிர்காலத்தில் பொருத்தமான பணிக்குச் செல்கிற விஷயத்தில் பெரும் தடையாகவே அமைகிறது.

மாணவர்கள் படிக்கிற காலத்திலேயே பாடங்களைத் தவிர மற்ற துறைகளிலும் போதுமான கவனம் செலுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.

எத்துறையாயினும் பேச்சுத் திறமை என்பது அவசியம். அப்பேச்சாற்றலை இளமையிலிருந்தே வளர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கேட்கிற வினாக்களுக்கு முந்திக்கொண்டு பதில் சொல்வதில் துவங்கி, எப்போது பேச்சுப்போட்டி வைத்தாலும் அதில் ஆர்வமாகக் கலந்து கொள்ள வேண்டும். வெற்றியா.. தோல்வியா.. என்பது பற்றிச் சிந்திக்க அவசியமில்லை.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை! புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை என்பது ஒரு கவிஞனின் வாக்கு.

இம்மாதிரியான போட்டிகளில் பங்கெடுக்கிற போது பல புத்தகங்களைப் புரட்டிக் குறிப்பெடுத்து தயார் செய்ய வேண்டிய அவசியம் நேர்கிறபோது புத்தகங்களை வாசிக்கிற பழக்கமும் ஏற்படும். ஒரே கல்லில் பல மாங்காய்கள் என்பது இதுதான்.

பெரும்பாலான மாணவர்கள் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ள விரும்புவதில்லை. சிலர் ஆர்வம் இருந்தும் கலந்து கொள்ளாமைக்கான காரணம்.. இம்மாதிரியான் போட்டிகளில் கலந்து கொண்டால் படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும் என்கிற தவறான் எண்ணம்.

போட்டிகளில் கலந்துகொள்வதற்கும், மதிப்பெண் வாங்குவதற்கும் சம்பந்தமில்லை. ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்கிஸ் செயல்படுகிற போது வெற்றி நம் வசமாகும்.

கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி இப்படி எந்தப் போட்டி வந்தாலும் மாணவர்களே... ஆர்வமாகக் கலந்து கொள்ளுங்கள். முதல் நான்கைந்து முறை வெற்றி பெற முடியா விட்டாலும் பரவாயில்லை. நாம் வெற்றிக்காகப் பெறுகிற சான்றிதழ்களையும், பரிசுகளையும்விட இதன் மூலம் பெறுகிற அனுபவங்கள் ஆற்றல் வாய்ந்தவை, பயனுள்ளவை.

வெற்றி பெறுகிறவர்களில் சிலர், தாங்கள் சுயமாகத் தயார் செய்யாமல் இருக்கிற யாரோ ஒருவர் தயார் செய்து கொடுக்கிற கருத்துகளை இவர்கள் பிரதியெடுத்து வெற்றி பெற்று விடுகிறார்கள். இது பயனற்றது. இம்மாதிரியான வெற்றிகளால் எந்தப் பயனும் விளையாது.

சுயமாக எல்லோர்க்குள்ளும் படைப்பாற்றல் மேலோங்கியிருக்கிறது. அந்தப் படைப்பாற்றல் துவக்கத்தில் ஆழமற்றதாக இருக்கலாம். தொடர் முயற்சிகள் மூலம் வீரியமான ஒரு சொந்தப் படைப்பைத் தரலாம்.

ரைட் சகோதரர்கள் எளிய கற்பனையாலும், விடாமுயற்சியாலும் ஆகாய விமானத்தை வடிவமைத்தனர்.

பள்ளிவாழ்க்கையில் எழுகிற எண்ணங்களும் , செயல்களுமே எதிர்காலத்தில் அவர்களை இலட்சிய மனிதர்களாக்குகிறது. இன்றைய சாதனையாளர்கள் யாவருமே மாணவப் பருவத்தில் பள்ளிப் பாடங்களோடு, தங்கள் சொந்தத் திறமையையும் பரிசோதனை செய்து கொண்டவர்தான்.

இன்றைய பல பிரபல எழுத்தாளர்கள் எல்லோருமே தங்கள் பள்ளிப் பருவத்தில் கவிதையென்றும், சிறுகதையென்றும் தோன்றியதையெல்லாம் எழுதிப் பார்த்தவர்கள்தான். அது ஒரு பயிற்சிக் களமாக அவர்களுக்கு இருந்தது.

உங்களுக்குள் பொதிந்து கிடக்கிற ஆற்றல் உங்களுக்கே தெரியாது. வெளிப்படுத்துகிற போது தான் அதன் வீரியம் புரியும்.

இந்தத் திறமைகளை முறியடிக்க பல சதித்திட்டங்கள் உங்களை முடக்கும். படிக்கிறதை ஒழுங்கா கவனி.. இவரு பெரிய கண்ணதாசனா வரப்போறாரு பாரு..'

'எப்பப் பாரு கிரிக்கெட்தான் உயிரு.. என்ன பெரிய சச்சினாவா வரப்போறாரு.. எல்லாம் வெறும் தண்டம்..'

இப்படி ஆசிரியர்களில் ஒருவரோ, பெற்றோரோ, வீதியில் போகிற யாரோ ஒருவரோ கூறுகிற அதிரடி வார்த்தைகள் உங்கள் எண்ணத்தைச் சிதறடிக்கும். கவலைப்படாதீர்கள்!

'ரேங்க் வாங்குகிறதில ஒன்னையும் காணோம்.. ஓவியம் வரயறாராம்... ஓவியம்...' என்று பெர்றோரின் வார்த்தைகள் தேளாய்க் கொட்டலாம்.

'ம்... இவரு இனிப் பேசித்தான்.. நாடு வளரப்போகுது...' நண்பர்கள் கேலி, குரல்வளையை நசுக்கலாம்.

போகட்டும்... இவர்கள் எல்லோரும் வருங்காலத்தில் உங்கள் திறமையைக் கண்டு வியப்பர்கள். அவர்கள் வியப்பதும் ஏசுவதும் நமக்கு முக்கியமல்ல. நம் திறமையை அடையாளப்படுத்துவதுதான் முக்கியம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.. பள்ளிப் பாடங்களைப் போலவே உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதிலும் முக்கியத்துவம் கொடுங்கள். அதற்கான ஆற்றலை வளர்த்தெடுக்க உதவும் ஆலோசனைகள் எங்கு கிடைக்குமோ அங்கு சென்று கண்டடையுங்கள்.

உங்களுக்குள் ஒரு சிறந்த விளையாட்டு வீரர், விஞ்ஞானி, ஓவியர், எழுத்தாளர், பேச்சாளர் ஒளிந்து கிடப்பதைத் தேடிக் கண்டுணருங்கள்.

அதிக மதிப்பெண், அதிக சம்பளமுள்ள வேலை, வசதியான வாழ்க்கை இவைகளுக்குப் பின்புலமாக உங்கள் திறமைகள் அமைவதுடன், பொதுநலம், மனித நெயம், சகோதரத்துவம் இவைகள் மலரவும் உங்கள் திறங்கள் பயன்படக் கூடும்.

இதோ உங்களைப் போல இரு மாணவிகள் எப்படித் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று பாருங்கள். ஒருவர் என்னுடைய மாணவி ந.சோபனா தேவி. இன்னொருவர் நான் விரும்பிப் படிக்கும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ்மொழி. இருவருமே 10-ஆம் வகுப்பு மாணவிகள்.

சிந்தும் மழையில்

சிறகடிக்கும் சிறுமி

சிட்டுக்குருவி

- ந.சோபனா தேவி

ஆறுமுகனே

பன்னிரு கைகள் வேண்டும்

வீட்டுப்பாடம்.

கு.அ.தமிழ்மொழி

எழுத்து: க.அம்சப்ரியா,"புன்னகை" சிற்றிதழ்,பொள்ளாச்சி