Tuesday, January 12, 2010

ராணி வேடமிட்ட சிறுமி - உரையாடல் போட்டிக்கவிதை

தன் நெடுநாளைய
எதிர்பார்ப்பு அரண்மனைக்குள்
அடியெடுத்துவைத்தாள்
தனக்கான சேவகர்கள் மண்டியிட்டிருக்க
எல்லோருக்கும் வாரி வாரி வழங்கினாள்
பேரன்பையும் கருவூலபெட்டகத்தையும்
நாட்டின் மூலைமுடுக்கெல்லாம்
சோற்றால் செழித்திருக்கும்படியாய்
ஆணைகளை பிறப்பித்தாள்.
எட்டுத்திக்கும் கொழிக்கும் வளம்பார்த்து
சிலாகித்து பெருமூச்சு விடுகையில்
நாடகம் முடிந்தும்
இன்னும் ராணியின் கனவாவென
கிரீடத்தை கழற்றச்சொல்லி
அதட்டிய ஆசிரியையின் கையில்
ஒப்படைத்தாள் சிறுமி
தன் பெரும் கனவுகள் யாவற்றையும்.

-"புன்னகை" அம்சப்ரியா

(உரையாடல் போட்டிக் கவிதை)